Friday, December 30, 2016

துத்திக்கீரை

கீரைகளின் பயன்களை அனைத்து மக்களும் உணரத் தொடங்கிவிட்டனர். காலை நேரங்களில் கீரைக் கட்டுகளை மக்கள் வாங்கிச் செல்வதை நாம் காண்கிறோம்.

குறைந்த விலையில் கிடைக்கிறது என்பதால் இதன் மகிமையை சில காலம் மறந்து நோய்களின் உறைவிடமாக தங்கள் உடம்பை ஆக்கிக் கொண்டு விட்டனர் பலர்.

ஆரோக்கியத்தை அள்ளித்தரும் குணம் கீரைகளுக்கு அதிகம் உண்டு என்பதை விளக்கும் வகையில் ஒவ்வொரு மாதமும் மூலிகை சமையல் என்னும் தலைப்பில் ஒவ்வொரு கீரையைப் பற்றி அறிந்து வருகிறோம்.

இந்த இதழில் கிராமங்களில் அதிகம் கிடைக்கும் துத்திக்கீரையைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
இந்தக் கீரை மருத்துவக் குணங்கள் கொண்ட கீரையாகும். இதனை கக்கடி, இக்கசி என்ற பெயர்களில் அழைக்கின்றனர்.

இவை இந்தியாவில் உஷ்ணப் பகுதிகளில் அதிகம் வளர்கிறது. இவற்றில் பால் துத்தி, சிறுதுத்தி, கருந்துத்தி, ஐயிதழ்துத்தி, காட்டுத் துத்தி, கொடித்துத்தி, நாமத்துத்தி, நிலத்துத்தி, பொட்டகத்துத்தி என பல வகைகள் உள்ளன.

Tamil - Thuthi       English - Country mallow      Telugu - Tutri-chettu      Malayalam - Pettaka
Sanskrit - Atibala  Botanical Name - Abutilon indicum

இதன் இலை, பூ, வேர், பட்டை என அனைத்துப் பகுதிகளும் மருத்துவக் குணம் கொண்டவை.

மூலநோய் கட்டி முளைபுழுப்புண் ணும்போகுஞ்

சாலவதக் கிக்கட்டத் தையலே - மேலுமதை

எப்படியேனும் புகிச்ச எப்பிணியும் சாந்தமுறும்

இப்படியிற் றுத்தி யிலையை

(அகத்தியர் குணபாடம்)

மலச்சிக்கல் தீர

மலச்சிக்கல் உடல் ஆரோக்கியத்திற்கு முதல் கேடாகும். மலச்சிக்கலை நீக்கினால் நோயின்றி நூறாண்டு வாழலாம். இன்றைய நவீன உணவுகள் எளிதில் ஜீரணமாவதில்லை, மேலும் அவசரமாக உணவை சாப்பிடுவதாலும் மலச்சிக்கல் உருவாகின்றது. மனச் சிக்கல் இருந்தால் கூடவே மலச்சிக்கல் வந்துவிடும்.

மலச்சிக்கல் உள்ளவர்கள் துத்திக் கீரையை நன்கு சுத்தமாகக் கழுவி, அதனுடன் பாசிப்பருப்பு சேர்த்து சமைத்து சாதத்துடன் கலந்து சிறிது நெய்சேர்த்து சாப்பிட்டு வந்தால் மலச் சிக்கல் தீரும்.

மூல வியாதி குணமாக

காரமும், புளிப்பும் உணவில் அதிகம் சேர்ப்பதால் சிலருக்கு குடலில் அலர்ஜி ஏற்பட்டு வாய்வுக்கள் சீற்றமாகி மூலக் குடலை அடைக்கிறது. இதனால் மூலத்தில் புண் ஏற்பட்டு மூலநோயாக மாறுகிறது. 

இவ்வாறு மூல நோயால் அவதிப்படுபவர்கள் துத்திக் கீரையை நீர்விட்டு அலசி சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் பாசிப்பருப்பு, பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நெய்விட்டு கடைந்து வாரம் இருமுறை மதிய உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால் மூலநோயால் ஏற்படும் பாதிப்புகள் குறைந்து மூலநோய் படிப்படியாகக் குணமாகும்.

உடல் சூடு தணிய

துத்திக் கீரையை நன்கு நீரில் அலசி சிறியதாக நறுக்கி நீரில் கொதிக்க வைக்க வேண்டும். நன்கு கொதித்த பின் அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு, தேவையான அளவு உப்பு சேர்த்து இரசமாக அருந்தி வந்தால் உடல் சூடு தணியும்.

வெப்பக்கட்டி குணமாக

துத்தியிலையை எடுத்து ஆமணக்கு (விளக்கெண்ணெய்) எண்ணெய் தடவி வதக்கி வெப்பக் கட்டிகளின் மேல் வைத்து கட்டி வந்தால் கட்டிகள் பழுத்து உடைந்து ஆறும்.

துத்தியிலையை சாறெடுத்து, பச்சரிசி மாவுடன் சேர்த்து களியாகக் கிண்டி கட்டிகளின் மேல் பூசி வந்தால் கட்டிகள் வெகு விரைவில் குணமாகும்.

பல்ஈறு நோய் குணமாக

துத்தி இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரில் வாய் கொப்பளித்து வந்தால் பல் ஈறுகளில் ஏற்படும் நோய்கள் தீரும்.

குடல் புண் ஆற

துத்திக் கீரையை வாரம் ஒருமுறை உணவில் சேர்த்து வந்தால் குடல் புண் ஆறும்.

சிறுநீர் பெருக்கி

சரியாக சிறுநீர் பிரியாமல் இருந்தால் சிறுநீரக நோய் வர வாய்ப்புள்ளது. துத்தியிலையை இரசம் செய்து அருந்தி வந்தால் நீர் நன்கு பிரியும். சிறுநீரக நோய் வராது.

துத்திக் கீரையை கிடைக்கும் காலங்களில் வாங்கி சமைத்து சாப்பிட்டு வந்தால் நீண்ட நாள் ஆரோக்கியத்தோடு வாழலாம். நன்றி : நக்கீரன் 

No comments:

Post a Comment